மத்தியஸ்தத்திற்கு தயார்... இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் களமிறங்கும் வல்லரசு நாடு
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என ஒதுங்கிக்கொண்ட வல்லரசு நாடொன்று தற்போது மத்தியஸ்தம் வழங்க தயார் என அறிவித்துள்ளது.
மத்தியஸ்தம் செய்ய
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் கூறியிருந்த நிலையில்,
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாக வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இது தொடர்பில் இரு நாடுகளிலும் உள்ள தனது சகாக்களுடன் தனித்தனியாக அவர் பேசும் போது அமெரிக்காவின் தற்போதைய முடிவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளில் ரூபியோ பேசியுள்ளார்.
இரு தரப்பினரும்
அப்போது, தவறான முடிவுகளைத் தவிர்ப்பதற்காக இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து நேரடி தகவல்தொடர்பை மீண்டும் நிறுவுவதற்கான வழிமுறைகளை அடையாளம் காண வேண்டும் என்று ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அவர் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீருடன் பேசியுள்ளார், அப்போது அவர் இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில் எதிர்கால மோதல்களைத் தவிர்ப்பதற்காக மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க உதவியை மார்கோ ரூபியோ வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியின் போது முதல் முறையாக அமெரிக்கா முன்வைக்கும் உதவி இதுவென்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |