அரையிறுதியில் இந்திய அணிக்கு பின்னடைவு - சதம் அடித்த வீராங்கனை விலகல்
2025 மகளிர் உலகக்கோப்பை செப்டம்பர் 30 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

வரும் 30 ஆம் திகதி அரையிறுதியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
பிரதிகா ராவல் விலகல்
இந்நிலையில், அணியின் முக்கிய வீராங்கனை காயம் காரணமாக அரையிறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நேற்று இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான கடைசி லீக் போட்டி, மழையின் காரணமாக பாதியிலே கைவிடப்பட்டது.
இந்த போட்டியில், இந்திய அணி பந்துவீசும் போது எல்லை கோட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த பிரதிகா ராவல்(Pratika Rawal), பந்தை தடுக்க முயலும் போது காயமடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
Worrying signs for India — Pratika Rawal helped off after twisting her ankle.🙁#CricketTwitter #CWC25 #INDvBANpic.twitter.com/H9SSKDk4vO
— Female Cricket (@imfemalecricket) October 26, 2025
இதில், கணுக்கால் மற்றும் முழங்காலில் காயமடைந்தது. வலியால் துடித்த அவர், சக வீராங்கனைகள் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர், "பிரதிகா அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னர் குணமடைவார்" என தெரிவித்தார்.
இந்நிலையில், காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து பிரதிகா ராவல் விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில், 6 போட்டிகளில் விளையாடி, 308 ஓட்டங்கள் எடுத்து, இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில், தனது முதலாவது உலக கோப்பை சதத்தை அடித்து, அணியை அரையிறுதிக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் வேகமாக(23 போட்டிகள்) 1,000 ஓட்டங்கள் எடுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |