மூன்று அறைகளில் வெடிகுண்டு... இரண்டு ஈரானியர்கள்: ஹமாஸ் தலைவர் கொலையில் சதிப் பின்னணி
இஸ்ரேலின் Mossad உளவு அமைப்பே, ஈரானியப் பாதுகாப்பு அதிகாரிகளின் ரகசிய உதவியுடன், ஹமாஸ் அரசியல் தலைவரை படுகொலை செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம்
தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த குடியிருப்பின் மூன்று அறைகளில் வெடிகுண்டை பதுக்கியுள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
உண்மையில், கடந்த மே மாதம் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச்சடங்கிற்காக இஸ்மாயில் ஹனியே தெஹ்ரான் விஜயம் செய்திருந்த போது படுகொலை செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் திட்டமாக இருந்துள்ளது.
ஆனால் திரளான மக்கள் கூட்டம், அவர்களின் திட்டத்திற்கு பெரும் சவாலாக அமைய, படுகொலை திட்டத்தை கைவிட்டுள்ளனர். மட்டுமின்றி, தோல்வியில் முடிந்தால், எதிரிகள் சுதாரித்துக் கொள்வார்கள் என்றும் இஸ்ரேல் கணித்துள்ளது.
இதனையடுத்து, ஈரானியர்களை உட்படுத்தி, தங்கள் திட்டத்தை முடிக்க இஸ்ரேல் காய்களை நகர்த்தியது. இதன் ஒருபகுதியாக ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் இணைந்து Mossad உளவு அமைப்பு திட்டம் தீட்டியது.
மூன்று அறைகளில்
இஸ்மாயில் ஹனியே தங்கியிருக்க வாய்ப்புகள் அதிகமுள்ள மூன்று அறைகளில் வெடிகுண்டை பதுக்கினர். இந்த இரு ஈரானியர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகியிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகள் தற்போது ஈரானிய அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளது.
சில நிமிடங்களிலேயே இருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை செய்து முடித்துவிட்டு வெளியேறுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது. அத்துடன், புதன்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ஹனியே தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் அறையில் பதுக்கப்பட்டிருந்த வெடிகுண்டை இயக்கி வெடிக்க வைத்துள்ளனர்.
பொதுவாக ஈரானிய உயர் மட்ட அதிகாரிகளுக்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஈரானின் Ansar-al-Mahdi என்ற பிரிவாகும். தற்போது Mossad உளவு அமைப்பும் இந்தப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இருவரையே, ஹனியேவை படுகொலை செய்ய பயன்படுத்தியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடந்த சம்பவத்தில் கொதிப்படைந்துள்ள IRGC எனப்படும் புரட்சிகரப் படை, இது ஈரானுக்கு பெருத்த அவமானம் என்றும் மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் என்றும் கொந்தளித்துள்ளது. மட்டுமின்றி, சிறப்பு குழு ஒன்றை அமைத்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் மீது பழி வாங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் உள்ளிட்ட ஆதரவு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுத்து வருவதாகவே தகவல் கசிந்துள்ளது.
இஸ்ரேலின் Mossad
ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் 7,000 வலுவான ஊழியர்களுடன் செயல்பட்டுவரும் அமைப்பாகும் இஸ்ரேலின் Mossad. அமெரிக்காவின் சிஐஏ-க்கு அடுத்தபடியாக மேற்கு நாடுகளில் உள்ள இரண்டாவது பெரிய உளவு அமைப்பாக மொசாத் உள்ளது.
மொசாத் அமைப்புக்கு பல பிரிவுகள் உண்டு, ஆனால் அந்த அமைப்பு பெரும்பாலும் மர்மமாகவே செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீனப் போராளி குழுக்களில் மட்டுமல்ல, லெபனான், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் மொசாத் ஊடுருவியுள்ளது.
இவர்களின் Metsada என்ற பிரிவே அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய படுகொலைகள், நாசவேலைகள், துணை ராணுவம் மற்றும் உளவியல் போர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |