ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட முன்னணி நடிகையை கைது செய்த ஈரான்: வெளிவரும் பின்னணி
ஈரானில் மூன்று மாதங்களாக நீடித்துவரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தின் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை Taraneh Alidoosti கைது
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துதல், தவறான கருத்தை பகிர்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 38 வயதான நடிகை Taraneh Alidoosti சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
@getty
2016ல் வெளியான ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான The Salesman-ல் நடித்தவர் இந்த Taraneh Alidoosti. கடந்த 8ம் திகதி தான் Taraneh Alidoosti தமது சமூக ஊடகத்தில் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக கருத்து கூறியிருந்தார்.
அதே நாளில் தான் 23 வயதான Mohsen Shekari என்ற இளைஞர், மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறி மரண தண்டனையை எதிர்கொண்டார்.
நடிகை Taraneh Alidoosti தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில், உங்கள் மௌனம் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையாளருக்கான ஆதரவைக் குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்
மேலும், இந்த இரத்தக்களரியை பார்த்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு சர்வதேச அமைப்பும் மனித குலத்திற்கு அவமானம் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி, ஹிஜாப் அனிந்து கொள்ளாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர், பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இளம் வயதில் இருந்தே ஈரானிய திரைப்படங்களில் தோன்றி பிரபலமடைந்தவர் Taraneh Alidoosti. இவரது புதிய திரைப்படமான Leila's Brothers கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதனிடையே, இளைஞர் Mohsen Shekari மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அதிர்வலை அடங்கும் முன்னர், இன்னொரு 23 வயது இளைஞர் Majidreza Rahnavard என்பவரை டிசம்பர் 12ம் திகதி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலேற்றியுள்ளது ஈரான் நிர்வாகம்.
அத்துடன், மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், இதுவரை 400 பேர்களுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கைதாகியுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகை Taraneh Alidoosti மீது ஈரான் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.