ட்ரம்ப் போரைத் தீவிரப்படுத்தினால்... வளைகுடா நாடுகளை அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கும் ஈரான்
Iran is considering attacking US military targets in Europe: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலனை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்தினால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இலக்குகளாக
ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் மாதத்தில் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கான சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப்படைத் தளம், சாத்தியமான இலக்குகளில் ஒன்றாகும்.

அந்தத் தாக்குதல், பிரித்தானிய இராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலாக அமைந்ததோடு, போரின் தீவிரத்தையும் அதிகரிப்பதாக இருந்தது.
மட்டுமின்றி, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல்கேரியா போன்ற நாடுகளும் ஈரானின் இலக்குகளாக அடையாளம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கேரியா கடந்த மாதம் தனது பெஸ்மர் (Bezmer) விமானப்படைத் தளத்திலிருந்து 8 போயிங் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் (Stratotanker) விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும், 250 பணியாளர்கள் செயல்படவும் அனுமதித்திருந்தது.
இதனிடையே, ஈரான் தனது ராணுவ நிலைப்பாட்டை தற்காப்பு நிலையிலிருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டு விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானை மீண்டும் சீண்டும் வகையில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பிரதேசமாகக் காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்ட ட்ரம்ப், அந்நாட்டுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இனி அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இழந்து வருகிறது
அமெரிக்காவும் ஈரானும் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ட்ரம்ப்பின் தூதரும் மருமகனுமான ஜாரெட் குஷ்னர் திங்களன்று கூறியிருந்த நிலையில், நிலைமை அப்படி இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்துள்ளார்.
பொதுவாக ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ஊடகங்களிடன் நாளும் கூறி வந்த ஜனாதிபதி ட்ரம்ப், முதல் முறையாக ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இனி அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹார்முஸ் நீரிணை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் திறந்திருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், அமெரிக்கா தங்களின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை, கப்பல் போக்குவரத்தின் மீதான தங்களது பிடியைத் தக்கவைத்துக்கொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அறிவித்துள்ளார்.

ஆனால் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணை மீதான தனது பிடியை ஈரான் படிப்படியாக இழந்து வருகிறது என்றே கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவம் தனது கடற்படையைக் கொண்டு அப்பிராந்தியத்தின் மீதான முற்றுகையைத் தொடர்ந்து, அப்பகுதியில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் குறைந்தது 95 கப்பல்களும், அதற்கு முந்தைய வாரத்தில் 118 கப்பல்களும் ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க ராணுவத்தின் ஒப்புதலுடன் கடந்துச் சென்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |