எலோன் மஸ்க்கின் நிறுவனங்கள் அடுத்த இலக்கு... ஈரான் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) ஸ்டார்லிங்க் (Starlink) சேவை உட்பட, எலோன் மஸ்க்கின் அனைத்து நிறுவனங்களையும் குறிவைத்துள்ளதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
நியாயமான இலக்குகளாக
ஈரான் அரசாங்க ஆதரவு செய்தி நிறுவனமான Fars வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கிழக்கில் எலோன் மஸ்க் நிர்வகிக்கும் பொருளாதாரச் சொத்துகள் தொடர்பான அனைத்து நலன்களும் தற்போது நியாயமான இலக்குகளாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ஸ்டார்லிங்க் சேவை உள்ளிட்ட எலோன் மஸ்க்கால் நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்புகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவங்கள் பயன்படுத்தியதற்குப் பதிலளிக்கும் விதமாகவே ஈரான் புதிய கொள்கை முன்னெடுக்கப்படுவதாக Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்டார்ஷீல்டு திட்டங்கள் மற்றும் இராணுவ செயற்கைக்கோள்களை ஏவுதல் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க இராணுவத்திற்கு மஸ்க் வழங்கிய இராணுவ உதவியானது, புவி கண்காணிப்பு, தகவல்தொடர்பு மற்றும் பாதுகாப்பான தரவு பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளின் வடிவத்தில் முன்னரே வெளிப்படுத்தப்பட்டது.
அத்துடன், இஸ்ரேல், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் உள்ள ஸ்டார்லிங்க் சேவை நிலையங்களும் தங்களது இலக்குகளில் உள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
ஸ்டார்ஷீல்ட் என்பது அரசாங்கம், இராணுவம் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் வலையமைப்பு ஆகும்.

ஸ்டார்லிங்க் பயன்பாடு
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் இந்தச் சேவை முக்கியப் பங்கு வகித்துள்ளது. இது அமெரிக்காவிற்கு வான்வழி ட்ரோன் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா கண்காணிப்பு ஆகியவற்றை நடத்தும் திறனை வழங்கியுள்ளது.
இதற்கும் மேலாக, ஈரான் நிர்வாகம் குடிமக்களுக்கு உலகளாவிய இணைய அணுகலைத் துண்டித்த பிறகு, ஈரானுக்குள் ஸ்டார்லிங்க் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது. இது ஈரானியர்களுக்கு வெளி உலகத் தகவல்களைப் பகிரவும் பெறவும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

ஏற்கனவே என்விடியா, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் உள்ளிட்ட பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது எலோன் மஸ்க் முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஈரான் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்த இருப்பதாகவும், அந்நாட்டின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பைக் கைப்பற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். இது ஈரான் மீதான போரை மேலும் தீவிரப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அமையும் என்றே அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |