ஹிஜாப் இல்லாமல் செஸ் தொடரில் பங்கேற்ற ஈரானிய பெண்: குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்
ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்ட ஈரானிய பெண்ணுக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கியுள்ளது.
ஈரானில் வெடித்த ஹிஜாப் விவகாரம்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என 22 வயது மாஷா அமினி(Mahsa Amini) என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலையத்தில் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இச்செயலுக்கு எதிராக அப்போது ஈரானில் மாதக்கணக்கில் போராட்டம் நடந்தது.
Shutterstock
இந்த போராட்டத்தில் 15,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர், மற்றும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாரா காடெம்(Sara Khadem) என்று அழைக்கப்படும் 26 வயதான சரசதத் கதேமல்ஷாரி(Sarasadat Khademalsharieh) என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இது ஈரானின் இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்தது.
மேலும் ஈரானிய அரசு சாரா காடெமை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது.
குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்
ஈரானுக்கு திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற நிலையில் சாரா காடெம் தன்னுடைய குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் ஜனவரியில் குடியேறினார்.
இந்நிலையில் சாரா காடெமிற்கு ஸ்பெயின் அதிகாரப்பூர்வ குடியுரிமை வழங்கப்படுவதாக புதன்கிழமை ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வ வர்த்தமானி அளித்த தகவலில், சாரா காடெமின் சிறப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு குடியுரிமை ஸ்பெயின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |