அலட்சியத்தால் 82 நோயாளிகள் பலி; சுகாதார அமைச்சர், ஆளுநர் சஸ்பெண்டு! பிரபல நாட்டில் அதிரடி
ஈராக்கில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு 82 பேர் பலியானதையடுத்து சுகாதார அமைச்சர் மற்றும் ஆளுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்கள் வெடித்ததில் பெரும் தீவிபத்து ஏற்ப்பட்டது.
சனிக்கிழமை இரவு நடந்த இந்த கோர சம்பவத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 82 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 110-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், இரவு முழுக்க போராடி தீயை ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
மருத்துவமனைக்குள் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
ஈராக்கின் சிவில் பாதுகாப்பு சேவைகளின்படி, விபத்து ஏற்பட்ட Ibn Al Khatib மருத்துவமனையில், "தீயணைக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லை மற்றும் மேற்கூரைகள் (False ceiling) தவறான முறையில் கட்டப்பட்டதால் தீப்பிழம்புகள் மிகவும் எரியக்கூடிய பொருட்களுக்கு பரவ அனுமதித்தன" என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்த மருத்துவமனை பாக்தாத்தின் தொலைதூர, விவசாய புறநகரில் அமைந்துள்ளதால், மருத்துவமனைக்கு தீயணைப்பு வீரர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த விபத்தில் பறிபோன 80-க்கும் மேற்பட்ட உயிர்களுக்கு பொறுப்பற்ற அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டு பிரதமர் Mustafa al-Kadhimi "இதுபோன்ற விஷயங்களில் அலட்சியம் என்பது ஒரு சாதாரண தவறு அல்ல, இது ஒரு பயங்கரமான குற்றம். இதில் கவனக்குறைவாக நடந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சர், பாக்தாதின் ஆளுநர், பாக்தாதின் சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவமனையின் பொறியியல் மற்றும் பராமரிப்பு இயக்குநர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஈராக் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.