இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா - Dream11 செயலிக்கும் தடையா?
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு மசோதா
இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாட தொடங்கியுள்ளனர். இதில், ரம்மி போன்ற சில விளையாட்டுகள் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகள் ஆகும்.
இளைஞர்கள் பலர், இதில் அதிக பணம் ஈட்டலாம் என நம்பி, ஏராளமான பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர். ஆனால், அதில் பணத்தை இழந்த சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இதன் காரணமாக இந்த விளையாட்டுக்களை தடை செய்யுமாறு பலரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இந்த விளையாட்டுகளில் மக்கள் ஏமாறாமல் தடுக்கும் வகையில் Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்ற மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர் இது சட்டமாக மாறும்.
மசோதாவில் என்ன உள்ளது?
இந்த மசோதாவின் படி, இதில் விளையாடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த விளையாட்டை விளையாடுபவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதுகிறது. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் பந்தயம் அல்லது சூதாட்டம் அடிப்படையிலான விளையாட்டுகளை இந்த மசோதா தடை செய்கிறது.
அதன்படி, இந்த விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விளையாட்டுகளுக்கு வங்கி கணக்கு அல்லது UPI செயலிகள் மூலம் பணம் செலுத்துவதும் தடை செய்யப்படுகிறது.
இந்த விளையாட்டுகளுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களும் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபாரதத்திற்கு உள்ளாகும்.
மேலும், இந்த விளையாட்டுகளை விளம்பரம் செய்து விளையாட ஊக்குவிப்போருக்கும் 2 ஆண்டு சிறை அல்லது ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது, திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.
Dream11 செயலிக்கு தடையா?
அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு(AIGF), மின் கேமிங் கூட்டமைப்பு(EGF), இந்திய ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு(FIFS) ஆகிய அமைப்புகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில், "இந்த மசோதா மூலம் 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடக்கூடும், 2 லட்சம் பேர் வேலை இழக்க கூடும்.
மேலும், ஆன்லைன் கேமிங் துறை ரூ.2 கோடி மதிப்புள்ள துறையாக வளர்ந்து, ஆண்டுக்கு ரூ.31,000 கோடி வருவாய் ஈட்டுவதாகவும், ரூ.20,000 கோடி வரியும் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
பணத்தை முதலீடு செய்து விளையாடுவதால், கிரிக்கெட் ரசிகர்களால் அதிகளவில் விளையாடப்படும் Dream11 போன்ற செயலிகளும் இந்த தடையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 நிதியாண்டில் Dream11 ரூ. 6,384 கோடி வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்ஸராக Dream11 மாறியுள்ளது. பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இதன் பிராண்ட் அம்பாசிடராக உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |