காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் முடக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான முட்டுக்கட்டை அதிகரித்த நிலையில், காஸாவிற்குள் உதவி லொரிகள் நுழைவதை இஸ்ரேல் மொத்தமாக தடுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்மொழிவு
கடந்த ஆறு வாரங்களாக சண்டையை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை குறிப்பிட்டு எகிப்து மற்றும் கத்தாரின் உதவியை ஹமாஸ் படைகள் நாடியுள்ளது.
ரமலான் மற்றும் பஸ்கா பண்டிகைகளை முன்னிட்டு காஸாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்தது.
இந்த முன்மொழிவை ஹமாஸ் படைகளும் ஏற்றுக்கொண்டால், மார்ச் 31 வரை ரமலான் காலத்திலும், யூதர்களின் பஸ்கா பண்டிகை கொண்டாடப்படும் ஏப்ரல் 20 வரையில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்.
ஆனால், உயிருடன் இருக்கும் மற்றும் இறந்த பணயக்கைதிகளில் பாதியை ஹமாஸ் முதல் நாளில் விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தில் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது.
மட்டுமின்றி, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் வாதிட்டு வருகிறது. அத்துடன், 42 நாட்களுக்கு தற்காலிகமாக நீட்டிக்கும் யோசனையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
போர் முடிவுக்கு
போர்நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், 2,000 பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் இருந்த கைதிகளுக்கு ஈடாக, ஹமாஸ் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஒப்படைத்ததோடு, திட்டமிடப்படாத 5 தாய்லாந்து நாட்டவர்களையும் ஒப்படைத்தது.
மட்டுமின்றி, காஸாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டது. அசல் ஒப்பந்தத்தின் கீழ், மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் தொடக்கம் இரண்டாம் கட்டத்தில் திட்டமிடப்பட்டது.
மட்டுமின்றி, காஸாவில் இருந்து மொத்த இஸ்ரேலிய இராணுவமும் வெளியேற வேண்டும் என்றும் இறுதியாக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.
ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை என்பதுடன் போர் நிறுத்தம் வேண்டும் என்றால் பணயக்கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இஸ்ரேல் கூறுகிறது. இந்த நிலையிலேயே தற்போது காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |