ஹமாஸ் தலைவர் என குறிப்பிட்டு Al Jazeera ஊடகவியலாளரைப் படுகொலை செய்த இஸ்ரேல்
காஸா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், Al Jazeera ஊடகவியலாளராகக் காட்டிக் கொண்ட ஹமாஸ் செல் தலைவரை குறிவைத்து கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அல் ஜசீரா ஊடகவியலாளர்கள்
குறித்த குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவத்திற்கு கத்தாரில் இருந்து செயல்படும் Al Jazeera செய்தி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிழக்கு காஸா நகரத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே கூடாரம் ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் அனஸ் அல் ஷெரீப் உட்பட நான்கு அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் அடங்கிய குழு கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் இராணுவத்தின் அந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
அல் ஷெரீப் ஹமாஸ் பிரிவின் தலைவராக இருந்தார், மேலும் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் துருப்புக்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவர் உதவியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, காஸாவில் கிடைத்த உளவுத்துறை தகவல்கள் மற்றும் ஆவணங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் குழுக்களும் அல் ஜசீராவும் இந்தக் கொலைகளைக் கண்டித்துள்ளன.
அவரது உயிருக்கு ஆபத்து
காஸாவில் இருந்து கள நிளவரங்களை ஒளிவு மறைவின்றி அல் ஷெரீஃப் வெளியிடுவதால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பத்திரிகை சுதந்திரக் குழு ஒன்றும் ஐ.நா. நிபுணர் ஒருவரும் முன்பு எச்சரித்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம், பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, அல் ஷெரீப்பைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியது. அல் ஷெரீஃப் கொல்லப்படுவதற்கும் சில நிமிடங்கள் முன்பு, இஸ்ரேல் இரானுவம் காஸா நகரத்தின் மீது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமான குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வருவதாக தமது சமூக ஊடகத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.
2023 அக்டோபர் 7ம் திகதி தொடங்கி இதுவரை காஸாவில் 237 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காஸா அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |