வெளிநாட்டில் கொல்லப்பட்ட லண்டன் சகோதரிகளின் தாயாரும்... வெளிவரும் அதிர்ச்சி தகவல்
இஸ்ரேலில் தீவிரவாத தாக்குதலுக்கு இரு லண்டன் சகோதரிகள் கொல்லப்பட்ட நிலையில், காயம்பட்ட அவர்களின் தாயாரும் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் குடும்பம்
இஸ்ரேலில் விடுமுறைக்காக கலிலி கடற்கரை பகுதிக்கு பயணப்பட்ட லண்டன் குடும்பம் ஒன்று தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 48 வயதான லூசி தி படுகாயமடைந்ததுடன், அவரது பிள்ளைகள் இருவர், 20 வயதான மாயா மற்றும் 15 வயதான ரினா ஆகியோர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்தனர்.
Credit: Family handout
கொல்லப்பட்ட சகோதரிகள் இருவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த லூசி தி தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பொலிசார் வெளியிட்ட தகவலில், லூசி தி குடும்பம் பயணித்த வாகனமானது 22 தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்தது எனவும், தாக்குதல்தாரி இதுவரை சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, லியோ தி இஸ்ரேலிய குடியேற்றப்பகுதியான க்ஃபார் எட்ஸியோனில் நடைபெற்ற அவரது மகள்களின் கூட்டு இறுதிச் சடங்குகளில் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். சம்பவத்தின் போது லியோ தி இன்னொரு காரில் தமது குடும்பத்தினரை பின் தொடர்ந்துள்ளார்.
Credit: Family handout
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு
மேலும், சாலை விபத்தில் தமது குடும்பம் சிக்கியதாகவே முதலில் அவர் கருதியுள்ளார். ஆனால் அதன் பின்னர் தான், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதை அவர் தெரிந்துகொண்டுள்ளார்.
2005 வரை லண்டனில் குடியிருந்த இந்த குடும்பம் அதன் பின்னர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளது. அவர்கள் பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகருக்கு அருகிலுள்ள எஃப்ராட் நகரில் குடியேறினர்.
Credit: Family handout
இஸ்ரேலிய வாகனம் என்பதை அறிந்ததினாலையே, தாக்குதல்தாரி இவர்களின் வாகனத்தை குறிவைத்ததாக கூறப்படுகிறது. இது தீவிரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள்,
தாக்குதல்தாரி இவர்களின் வாகனம் அருகே செல்வதும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த குழுக்களும் பொறுப்பேற்கவில்லை.