போர் நிறுத்த ஒப்பந்தத்தை 47 முறை மீறி 38 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்
அக்டோபர் தொடக்கத்தில் ஹமாஸுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேல் 47 முறை ஒஅப்பந்தத்தை மீறியதாக காஸா ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றம்
இதில் 38 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 143 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த மீறல்களில் பொதுமக்களுக்கு எதிராக நேரடி துப்பாக்கிச் சூடு, வேண்டுமென்றே ஷெல் தாக்குதலுடன் இலக்கு வைப்பது மற்றும் பல பொதுமக்களைக் கைது செய்தல் ஆகியவை அடங்கும்.
போரின் முடிவு அறிவிக்கப்பட்ட போதிலும் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக் கொள்கையை இது பிரதிபலிக்கிறது என்றே காஸா ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், நிராயுதபாணியான பொதுமக்களைப் பாதுகாக்கவும் கட்டாயப்படுத்த ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் ஒப்பந்தத்தின் உத்தரவாதக் கட்சிகள் அவசரமாகத் தலையிட வேண்டும் என்றும் காஸா அதிகாரிகள் தரப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், காஸாவில் இன்னும் சிக்கியுள்ள அனைத்து பணயக்கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் ஒப்படைத்த பின்னரே ரஃபா கடவை மீண்டும் திறக்கப்படும் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கம் சனிக்கிழமை இரவு பெற்றுக்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீன குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர், இது எட்டு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மிக மோசமான ஒற்றை மீறலாகவே பார்க்கப்படுகிறது.
பழி சுமத்தி வருகின்றன
காஸா நகரத்தின் ஜெய்டவுன் பகுதியில் உள்ள தங்கள் வீட்டிற்குச் செல்ல அந்தக் குடும்பத்தினர் முயன்றபோது, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை வரையறுக்கும் மஞ்சள் கோட்டை தாண்டிச் சென்றதாகக் கூறி அவர்கள் பயணித்த பேருந்து தாக்கப்பட்டதாக காஸாவின் சிவில் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 3 பெண்களும் 7 சிறார்களும் அடங்குவர். இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்கையில், மஞ்சள் கோட்டைக் கடந்து வடக்கு காஸா பகுதியில் செயல்படும் ஐ.டி.எஃப் துருப்புக்களை நெருங்கும் சந்தேகத்திற்கிடமான வாகனம் அடையாளம் காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த மீறல்களுக்கு தொடர்ந்து பழி சுமத்தி வருகின்றன. இறந்த பணயக்கைதிகளின் உடல்களை திருப்பித் தரத் தவறியதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
ஆனால், இஸ்ரேல் தாக்குதல்களால் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்க முடியாத நிலையில், இதுவரை 12 சடலங்களை மட்டுமே ஹமாஸ் படைகள் ஒப்படைத்துள்ளனர்.
காஸாவின் இடிபாடுகளிலிருந்து எஞ்சியுள்ளவர்களை மீட்டெடுக்க சிறப்பு மீட்பு உபகரணங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். இடிபாடுகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சுமார் 10,000 பாலஸ்தீன மக்களின் உடல்கள் சிக்கியுள்ளதாக காஸாவின் சிவில் பாதுகாப்பு முகமை மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |