ஈரான் தாக்குதலுக்கு பதிலடி... இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு: ஒரே ஒரு சிக்கல்
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணையால் அதிரடி தாக்குதலை முன்னெடுத்த ஈரானுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேலிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிய நேரம் மற்றும் அதன் அளவு
குறித்த தாக்குதலை முன்னெடுக்க உரிய நேரம் மற்றும் அதன் அளவு தொடர்பில் அமைச்சரவையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
ஐந்து பேர்கள் கொண்ட போர்க்கால அமைச்சரவை ஈரான் தொடர்பில் விரிவான மற்றும் தீவிரமான ஆலோசனை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது. பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உட்பட முக்கிய தலைவர்கள் கொண்ட அந்த அமைச்சரவை ஞாயிறன்று மீண்டும் கூடியதுடன், மீண்டும் இந்த விவகாரம் தொடர்பில் சந்தித்து முடிவெடுக்க உள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்திருந்தாலும், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா துணையிருக்காது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
மேலும், ஈரான் மீதான தாக்குதலில் தமக்கு உடன்பாடில்லை என்றே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பில் இருந்து பதிலடி தர முன்வந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
டமாஸ்கஸ் தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு இதற்கு பதிலடி தர முன்வந்தால், மத்திய கிழக்கில் தொடங்கும் போர் உலகப் போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |