மத்திய கிழக்கு நாடுகளில் ட்ரம்பின் அரசு முறைப்பயணம்... காஸா மீது இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்த உக்கிரத் தாக்குதலில் புதன்கிழமை மட்டும் 65 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள், சிறார்கள் உட்பட
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறைப்பயணத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா பகுதியில் பல குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையின் கீழ் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பதுங்கு குழியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இராணுவத் தலைவர் முகமது சின்வார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகமது சின்வார், இஸ்ரேலியப் படைகளால் முன்னர் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வாரின் சகோதரராவார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்தோ அல்லது ஹமாஸிடமிருந்தோ எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.
ஐரோப்பிய மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் பலர் காயங்களுடன் தப்பியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு, காஸாவில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸுடன் கூட்டணி வைத்து, இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசியது.
சிறந்த எதிர்காலத்திற்கு
மத்திய கிழக்கு நாடுகளில் ட்ரம்பின் பயணத்திற்கு முன்னதாக, திங்களன்று ஹமாஸ் படைகள், உயிருடன் இருந்த கடைசி அமெரிக்க பணயக்கைதியான எதன் அலெக்சாண்டரை விடுவித்தது.
செவ்வாயன்று ரியாத்தில் பேசிய ட்ரம்ப், அலெக்சாண்டரைப் போன்று மேலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், காஸா மக்கள் சிறந்த எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள் என்றும் கூறினார்.
சமீபத்திய வாரங்களில் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதுடன், ஹமாஸும் இஸ்ரேலும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றன. இதனிடையே, தனியார் ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்தி காஸாவில் மனிதாபிமான உதவி விநியோகங்களை மீண்டும் திறக்கும் திட்டத்தையும் அமெரிக்கா முன்வைத்துள்ளது.
மார்ச் 2 முதல் காஸாவிற்குள் செல்லும் மொத்தப் பொருட்களையும் முழுமையாகத் தடை செய்துள்ள இஸ்ரேல், இந்தத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |