காஸாவை அடுத்து இன்னொரு மத்திய கிழக்கு நாடு மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்
காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பார்வை தற்போது மொத்தமாக லெபனான் பக்கம் திரும்பியுள்ளது.
தாக்குதலின் தீவிரம்
பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் இரவு முழுவதும் இஸ்ரேல் இராணுவம் உக்கிர தாக்குதலை முன்னெடுத்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹிஸ்புல்லா முகாம்களை மட்டுமே தாங்கள் குறிவைத்துள்ளதாக இஸ்ரேல் பதிலளித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அவுன் தெரிவிக்கையில், மீண்டும் ஒருமுறை, தெற்கு லெபனானில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கொடூரமான இஸ்ரேலிய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இஸ்ரேல் நிர்வாகத்தின் பார்வை தற்போது லெபனான் மீது திரும்பியுள்ளது என்பது சமீபத்திய தாக்குதலின் தீவிரம் உணர்த்துகிறது என அவுன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, காஸாவை அடுத்து இனி இஸ்ரேல் லெபனான் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தெற்கு லெபனானில் உள்ள அல்-மசைலே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
300 க்கும் மேற்பட்ட
தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கி அழித்ததாகக் கூறியுள்ளது.
இதனிடையே, லெபனானின் உத்தியோகப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலிய போர் விமானங்கள் அல்-மசைலேவில் அகழ்வாராய்ச்சி தளங்களை குறிவைத்து 10 முறை தாக்குதல்களை நடத்தி 300 க்கும் மேற்பட்ட வாகனங்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எல்லையிலிருந்து வடக்கே 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது அல்-மசைலே. இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு,
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பாகும் இஸ்ரேல் நிர்வாகத்திற்கு எதிராக லெபனான் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |