100 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்!
இத்தாலியில் 100 வயதில் ஒரு பெண் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துள்ளார்.
வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக, ஒரு இத்தாலியப் பெண் தனது 100-வது வயதில் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சமீப வருடங்களில் தனது 100 வயதில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தவர்களில் அந்தப் பெண் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணமான விசென்சாவில் உள்ள ஓட்டுநர் பள்ளியில் கண் பரிசோதனையை முடித்த பிறகு, கேண்டிடா உடெர்சோவுக்கு (Candida Uderzo) புதிய உரிமம் வழங்கப்பட்டது. அவர் தன்னிச்சையாக இருக்க விரும்புவதால், தன் மகன் தனக்காக வாகனம் ஓட்டுவதை அவர் விரும்பவில்லை.
Candida Uderzo Photo: Corriere Del Veneto
இது குறித்து பேசிய உடெர்சோ “இந்தப் புதுப்பித்தல் எனக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, என்னைச் சிறிது சுதந்திரமாகவும் உணர வைக்கும். நான் அதிர்ஷ்டசாலி, எனக்கு 100 வயதாகிறது, மிகவும் ஆரோக்கியமாக இருப்பது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஒருபோதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது ஒருமுறை தூக்க மாத்திரையை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
தனது கண்பார்வை நன்றாக இருப்பதாகக் கூறி, கண்ணாடி இல்லாமல் செய்தித்தாளைப் படிக்க முடியும் என்று உடெர்சோ கூறியுள்ளார்.
உடெர்சோவின் வாழ்க்கையில் இருந்த ஒரே வருத்தம் அவர் தனது இளம் வயதிலேயே கணவனை இழந்ததுதான். "ஆனால் உயிருடன் இருப்பது என்பது முடிந்தவரை அதை அனுபவிப்பது என்று நான் முடிவு செய்தேன். நான் நண்பர்களுடன் நீண்ட நேரம் நடக்க ஆரம்பித்தேன், அது துக்கத்தை சமாளிக்க எனக்கு உதவியது. ஓய்வு பெற்ற பிறகு, நான் ஒரு நடைபயிற்சி குழுவில் சேர்ந்தேன், அன்றிலிருந்து ஒரு பயணத்தைத் தவறவிடவில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 மணிக்கு, நான் செல்ல தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.