இனி IPL போல் ஜல்லிக்கட்டு லீக் போட்டி.. வென்றால் அரசு வேலை: உதயநிதி அசத்தல் அறிவிப்பு
ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலிக்கப்படுவதாகவும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி
தமிழகத்தில் நேற்று மாட்டுப்பொங்கல் பெரு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும் மாட்டுபொங்கல் கொண்டாடப்பட்டது.
மேலும், புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 3677 காளைகளும், 1412 மாடு பிடி வீரர்களும் ஒன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டன. 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், தகுதியுள்ள 1,200 காளைகள் மற்றும் 800 வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது.
IPL போல் ஜல்லிக்கட்டு லீக் போட்டி
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி பின்னர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தும், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை ஆண்டு முழுவதும் நடத்தும் விதமாக , ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த பரிசீலனை செய்து வருகிறோம்.
மேலும், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்க தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |