கனடாவில் எப்படி குடியுரிமை வாங்கினீர்கள் என்று தெரியும்! தமிழ் கிருத்துவ சமூகத்திற்கு அவமானம் - ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம்
பால் தினகரனின் மனைவி இவாஞ்சலினின் பேச்சுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத போதகர் மனைவி
கிருத்துவ மத போதகர் பவுல் தினகரனின் மனைவி இவாஞ்சலினின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் அவர், கனடாவில் தங்கள் குடும்பம் சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், ஆனால் கடவுளை பிரார்த்தனை செய்த பின்னர் சொந்த வீடு வாங்கும் அளவுக்கு வசதி கிடைத்ததாகவும் கூறினார்.
மேலும், தேவதூதன் கனவில் வந்து என்ன கார் வேண்டும் என்று கேட்டதாகவும், மறுநாள் கணவர் உனக்கு என்ன கார் வேண்டும் என அதே கேள்வியை கேட்டதாகவும் அதற்கு கடவுள் ஆசீர்வாதம் செய்ததாகவும் பேசியிருந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் கண்டனம்
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த வீடியோவை குறிப்பிட்டு பேஸ்புக் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், 'இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு, அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொளி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் குறிப்பிட்ட காணொளி கிருத்துவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், அது நேர்மறையான காரணத்திற்காக அல்ல; ஏளனத்திற்கும், நகைப்பிற்கும்.
இந்தக் கேலியும், கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன்.
ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிருத்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு. உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்திற்கே தெரியும். புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும் தான்.
பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்தில் இருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை, அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை.
உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு! உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பாரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்.
வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்து வைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவை போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிருத்தவர் அறிவர்.
இந்தச் சூழலில் நீங்கள் 'எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஹொட்டலில் தங்கியிருந்தோம்' என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகசம் செய்திருக்கிறீர்கள்!
ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய், கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவர்களுக்கு எவ்வளவு பணம் வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா?
இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்று கூட உங்களால் சிந்திக்க முடியலையா? எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்!' என தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கிருத்துவச் சமூகமே அவமானத்தில்
மேலும் அவர், ''வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிருத்துவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிருத்துவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.
உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிருத்துவையும், கிருத்துவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்திற்காக அமைதிகாக்கின்றனர்.
கிருத்துவத்தை கேலிக்கூத்தாக முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. நற்செய்தியைப் பரப்ப வேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச் செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீர்கள்?
மூத்த தினகரன் தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம்.
ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்தி செயல்படப் பாருங்கள். பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதாக, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!'' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |