ஆசிய விளையாட்டு வீரர்கள் தங்க ரூ.268 கோடிக்கு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள ஜப்பான்
japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி
20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த 17,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
வழக்கமாக சர்வதேச விளையாட்டு தொடர்களின் போது, வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும்.
ரூ.268 கோடிக்கு வாடகையில் சொகுசு கப்பல்
ஆனால் ஜப்பான், வீரர்களை தங்க வைக்க ‘கோஸ்டா செரீனா’ என்ற இத்தாலிய சொகுசு கப்பலை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.
சுமார் 300 மீட்டர் நீளமும், 100,000 டன்களுக்கும் அதிகமான எடையும், 1,500 அறைகளும் கொண்ட இந்தக் கப்பலில், சுமார் 4,000 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் தங்க வைக்கப்படுவார்கள்.

28 மில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ.268 கோடி) செலவில் அந்த கப்பல் வாடகைக்கு எடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வசதி குறைபாடு
நகோயா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில், தங்குமிட வசதி குறைபாடு குறித்து பல்வேறு நாடுகளும் புகார் தெரிவித்துள்ளன.
2 வீரர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை 3 பேர் பகிர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போட்டியை நடத்தும் ஜப்பானை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தென் கொரியா அணியைச் சேர்ந்த ஒரு வீரர் தனது குடிலில் தண்ணீர் கசியும் தொட்டியையும், தரை முழுவதும் ஈரமாக இருப்பதையும் காட்டும் காணொளியை, "தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இதே போல், தாய்லாந்து வீரர்கள் சொகுசு கப்பலின் வரவேற்பு மையத்தில் தரையில் படுத்து உறங்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
சில பயிற்சியாளர்கள் போன்ற சில அதிகாரிகள், வெளியே வெவ்வேறு ஹொட்டல்களுக்கு சென்று தங்கியுள்ளனர்.
ஜப்பானில் ஒரு பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுக்கு, ஒரு சொகுசுக் கப்பல் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை," என்று அந்த சொகுசுக் கப்பலை வரவேற்கும் விழாவில் ஏற்பாட்டாளர் ஓமுரா தெரிவித்துள்ளார்.