வரலாற்றில் 1,35,000 உயிர்களை பலி வாங்கிய அணுகுண்டு தாக்குதல்..மன்னிப்பு கேட்காத அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ஜப்பானுக்கு ஜி7 மாநாட்டிற்காக சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரண்டாம் உலகப்போரின்போது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலுக்கு ஜப்பானிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு வீச்சு
1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்க சக்தி வாய்ந்த அணுகுண்டு வீசியது. இதில் சுமார் 1,35,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 69,000 பேர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டது.
இதற்காக அமெரிக்கா தரப்பில் மன்னிப்பு கேட்கப்படவில்லை. முன்னதாக, 2016ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஹிரோஷிமாவுக்கு சென்றபோது, அணுகுண்டு தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவில்லை.
AP Photo/Susan Walsh,POOL
ஜோ பைடன் மீது எதிர்பார்ப்பு
மாறாக அவர் போரின் செலவுகள் மற்றும் அமைதி, அணு ஆயுதக் குறைப்பு ஆகியவற்றின் தேவை பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், ஜப்பான் வந்தடைந்த ஜோ பைடன் தனது மனைவியுடன் ஹிரோஷிமாவில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்நகரின் அமைதிப் பூங்கா மற்றும் நினைவு அருங்காட்சியகத்தில் சுற்றுப்பயணம் செய்ய ஜி7 தலைவர்களுடன் பைடன் இணைந்தார்.
மன்னிப்பு கேட்காத பைடன்
அதன் பின்னர் நினைவகத்தில் உள்ள அருங்காட்சியகத்தை ஜி7 தலைவர்கள் பார்வையிட்டனர். இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் இறந்த ஆயிரக்கணக்கானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
FOREIGN MINISTRY
ஜோ பைடன் ஒவ்வொரு தலைவருடனும் இணைந்து மலர்வளையம் அணிவிப்பதில் கலந்துகொண்டார். அச்சமயம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியதற்காக ஜோ பைடன் மன்னிப்பு கேட்கவில்லை.
இதன்மூலம் ஆயுதம் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்காமல், அதனால் ஏற்பட்ட அழிவு குறித்து வருத்தம் தெரிவிப்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பது உறுதியானது என்று கூறப்படுகிறது.