ஹிஜாப்பை ஆதரித்து போராட்டம் நடத்திய 58 மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்
இந்தியாவில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்று போராடிய 58 மாணவிகளை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பியூ கல்லூரிகளில் முதலில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. இதையடுத்து இந்தியாவின் பல இடத்தில் ஹிஜாப் சர்ச்சை பெரியளவில் வெடித்து வருகின்றது. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர்.
இதனால் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து கல்லூரிகள் மூடப்பட்டன.
இதையடுத்து மீண்டும் தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இவர்களை பள்ளி நிர்வாகத்தினர் தடுத்து ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் சிரளகொப்பாவில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் நேற்று தடையை மீறி மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிவது எங்களின் அடிப்படை உரிமை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
மேலும் ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை. நாங்கள் இறந்தாலும் கூட ஹிஜாப் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் என கோஷமிட்டனர்.
இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவு 144 தடை உத்தரவு பற்றி எடுத்து கூறப்பட்டு அவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.