20 லட்சம் புத்தகங்களுடன் இயங்கும் இலவச நூலகம் - வீட்டை விற்று உருவாக்கிய நபர்
75 வயதான நபர், தனது வீட்டை விற்று இலவச நூலகம் கட்டிக்கொடுத்துள்ளார்.
வீட்டை விற்று இலவச நூலகம்
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள ஹரலஹள்ளி கிராமத்தை சேர்ந்த 75 வயதான அங்கே கவுடா (Anke Gowda), சிறு வயதிலே இருந்து புத்தகங்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டுள்ளார்.
தனது 20 வயதில் பேருந்து நடத்துநராக பணியாற்ற துவங்கிய போதே, கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை புத்தகம் வாங்க செலவிட்டுள்ளார்.
அதன் பின்னர், சர்க்கரை ஆலை ஒன்றில் தலைமை நேரக்கண்காணிப்பு அலுவலராக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தனது வருமானத்தில் 80 சதவீதத்தை புத்தகம் வாங்கவே செலவிட்டுள்ளார். மேலும், போனஸ் கிடைக்கும் பணத்திலும் புத்தகம் வாங்கியுள்ளார். இப்படியாக ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார்.
அந்த நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக மைசூரில் உள்ள தனது நிலம் மற்றும் வீட்டை விற்றுள்ளார்.
தற்போது, மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அருகே உள்ள ஹரலஹள்ளி கிராமத்தில் புஸ்தக மானே Pustaka Mane என்று அழைக்கப்படும் அவரின் நூலகம் இயங்கி வருகிறது.
இந்த நூலகத்தில், 5 லட்சம் அரிய வெளிநாட்டு புத்தகங்கள், பல்வேறு மொழிகளில் 5000 க்கும் அதிகமான அகராதிகள், 1832 ஆம் ஆண்டுக்கு முந்தைய கையெழுத்துப் பிரதிகள், மற்றும் வெளிநாட்டு மொழிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளது.
இந்த நூலகத்தில் சென்று படிப்பதற்கு நுழைவு கட்டணமோ, சேவை கட்டணமோ வசூலிக்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும், இலவசமாக இந்த நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த நூலகத்திற்கு கர்நாடகாவில் இருந்து மட்டுமின்றி, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சிவில் சர்வீசஸ் தேர்விற்கு தயாராகுபவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என இந்தியா முழுவதிலுமிருந்து வந்து செல்கின்றனர்.
அங்கே கவுடாவின் இந்த முயற்சிக்கு, அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் சாகர் தங்களது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |