கேரளாவிலிருந்து லண்டனுக்கு தனியாக சைக்கிள் பயணம்! ஆசை நிறைவேற ஐ.டி வேலையை விட்ட இளைஞர்
கேரளவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து லண்டன் வரை தனது சைக்கிளில் பயணிக்கிறார்.
தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற தனது லாபமிகு ஐ.டி. வேலையை விட்டுவிட்டார்.
ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு பயணம் செய்வது, அதுவும் 30,000 கிலோமீட்டர்கள் மற்றும் 35 நாடுகளை மிதிவண்டியில் பயணித்து கடப்பது என்பது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.
ஆனால், ஐடி துறையில் லாபகரமான வேலையைத் துறந்த இந்த கேரள இளைஞருக்கு, தனது பூகோளக் கனவுகளை நனவாக்க, கண்டங்களுக்கு இடையிலான பயணம் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.
ஃபைஸ் அஷ்ரப் அலி (Faiz Ashraf Ali) எனும் 34 வயது இளைஞர், தீவிரமான பயண ஆர்வலர், ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திங்களன்று கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து லண்டனுக்கு தனது தனி சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி அங்கு நடந்த விழாவில் சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
"இதயத்தில் இருந்து இதயம் வரை" என்ற முழக்கத்துடன் Eco Wheelers குழு ஏற்பாடு செய்து , குறைந்தது 450 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம், உலக நாடுகளிடையே அன்பு மற்றும் அமைதியின் செய்தியை பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அலி 35 நாடுகளில் 30,000 கிலோமீட்டர்களை கடந்து 450 நாட்களில் லண்டனை சென்றடைவார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானும் சீனாவும் அவருக்கு விசா வழங்காததால், அவர் தனது பயணத்தின் போது இந்த நாடுகளைத் தவிர்த்து விடுவார்.
சைக்கிள் மூலம் மும்பையை அடைந்த பிறகு, அலி ஓமன் செல்லும் விமானத்தில் ஏறி, அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஈராக், ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பயணம் செய்வார்.
அவர் பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியாக லண்டன் வரை மிதிவண்டியில் பயணிக்கவுள்ளார்.
ஃபைஸ் அஷ்ரப் அலி, ஐடி நிறுவனமான விப்ரோவில் தனது வேலையை விட்டுவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். 2019-ல் அவரது சொந்த மாவட்டமான கோழிக்கோட்டில் இருந்து சிங்கப்பூருக்கு அவரது முதல் தனிப் பயணம் இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பயண மற்றும் லக்கேஜ் பாகங்கள் நிறுவனம், தற்போதைய பயணத்திற்கு நிதியுதவி செய்கிறது. ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பும் அலியின் பயணத்திற்கு ஆதரவளித்து வருகிறது.