காதலர் தினத்தில் கணவருக்காக பலரும் செய்ய தயங்கும் காரியத்தை செய்த மனைவி! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் கணவருக்கு தனது கல்லீரலை மனைவி தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ் (42) இவரது மனைவி பிரவிஜா (39). சுபீஷுக்கு கல்லீரலில் பிரச்சனை இருந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் சுபீஷுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சமீபத்தில் கூறினர். அப்போதுதான் தன் காதல் கணவருக்கு தனது கல்லீரலையே தானமாக வழங்க பிரவிஜா முடிவு செய்துள்ளார்.
இது குறித்த பரிசோதனைக்கு பின்னர் அவரின் கல்லீரல் சுபீஷுக்கு பொருந்தும் என தெரியவந்தது. இதனையடுத்து காதலர் தினமான நேற்று காலை 6 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கி 17 மணி நேரம் வரை நடந்தது.
முதலில் பிரவிஜாவின் 40 சதவீத இடது பக்க கல்லீரல் நீக்கப்பட்டு சுபீஷுக்கு பொருத்தப்பட்டது. அடுத்த 48 மணி நேர சிகிச்சை சுபீஷுக்கு முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சையின் அடுத்த முக்கியமான கட்டம், புதிதாக மாற்றப்பட்ட கல்லீரலுடன் அவரது உடலின் மற்ற பாகங்களை ஒத்துழைக்க வைக்கும் சிகிச்சையாகும். 29 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழ இந்த கல்லீரல் மாற்று சிகிச்சையை செய்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் கேரளாவிற்கு முக்கிய மைல்கல் இது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.