கால்பந்து போட்டியில் மகளுடன் தோன்றிய கிம் ஜாங் உன்: வட கொரியாவின் அடுத்த வாரிசை அறிமுகப்படுத்துகிறாரா?
மறைந்த தந்தை கிம் ஜாங் இல்-லுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டிக்கு வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏ-வை அழைத்து வந்து இருந்தார்.
கால்பந்து போட்டி
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் மறைந்த தந்தையான கிம் ஜாங் இல்-லின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வட கொரியாவில் மிகப்பெரிய கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அவரது 10 வயது மதிக்கத்தக்க மகள் கிம் ஜூ ஏ-யுடன் தோன்றினார்.
மேடையின் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள் கிம் ஜூ ஏ போட்டியை மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடன் பார்வையிட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
AP
மகள் கிம் ஜூ ஏ-விற்கு இது ஆறாவது பொது தோற்றமாகும், இதன் மூலம் மகள் கிம் ஜூ ஏ, ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசுக்கு முதன்மையானவரா என்ற ஊகத்தை தூண்டியுள்ளது.
அதே சமயம் ஜனாதிபதி கிம்மின் சகோதரியும் அவரது உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரியான கிம் யோ ஜாங், பின் வரிசையில் அமர்ந்து போட்டியை பார்வையிட்டார்.
வட கொரியாவின் அரசியல் வட்டாரங்களில் கிம் யோ ஜாங் அடுத்த தலைவராக இருப்பார் என்ற கருத்தும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Korea News Service via AP
இரண்டு மகள் ஒரு மகன்
ஜனாதிபதி கிம் ஜாங் உன் 39 வயதுடையவராக இருப்பார் என்று நம்பப்படுகிறது, அவரது மனைவி ரி சோல் ஜூவுடன் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், அதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கருதப்படுகிறது.
வடகொரியாவில் வரலாற்று ரீதியாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் படிநிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.