பசிபிக் தாக்குதல் வரம்பாக பயன்படுத்தப்படும்! அமெரிக்காவுக்கு கிம் ஜாங் உன் சகோதரி எச்சரிக்கை
வட கொரியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பசிபிக் பகுதியை எங்கள் துப்பாக்கிச் சூடு வரம்பாக பயன்படுத்துவோம் என கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
விண்ணில் பாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
வட கொரியா திங்கட்கிழமை காலை அதன் கிழக்கு கடற்கரை பகுதியில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாக அந்நாட்டின் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அரசு ஊடகமான KCNA வெளியிட்டுள்ள தகவலில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் 245 மைல்கள் மற்றும் 209 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
AP
இந்த ஏவுகணை ஜப்பான் பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வட கொரியா செலுத்திய பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனையின் எதிரொலியாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஞாயிற்றுக்கிழமை கூட்டு விமானப் பயிற்சிகளை நடத்தின.
இந்த கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா திங்கட்கிழமையான இன்று மேலும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தியுள்ளது.
AP
சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவும் அமெரிக்காவும் "தங்களுடைய ஆபத்தான பேராசையை வெளிப்படையாகக் காட்டுகின்றன” என்றும், கொரிய தீபகற்பத்தில் இராணுவ மேலாதிக்கம் மற்றும் முக்கிய இடத்தைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரிகளின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் கவனிப்போம், நமக்கு விரோதமான அசைவுகள் ஏற்பட்டால் அதற்கேற்ற சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய எதிர்ப்பை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க படைகளின் தன்மையை பொறுத்து பசிபிக் பகுதியை எங்கள் துப்பாக்கிச் சூடு வரம்பாகப் பயன்படுத்துவதற்கான அதிர்வெண் தீர்மானிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.