உலக முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்!
தமிழ் மக்களின் வாழ்வியலுடன் பிரிக்க முடியாத வகையில் அவர்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர்நாள் நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ளன.
மாவீரர்நாள் நிகழ்வுகளை குழப்பும் வகையில் இறுதிநேரம் வரை இலங்கை பாதுகாப்புத்தரப்பின் அடாவடிகளும் ஒடுக்குமுறைகளும் இடம்பெற்ற போதிலும் அவ்வாறான இன்னல்களையெல்லாம் வழமைபோலவே புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றும் வகையில் வளாகங்களில் இன்று மாலை முதல் ஒன்று கூடிவருகின்றனர்.
மாவீரர்நாள்
எந்த தேசமாக இருந்தாலும் அது தனது போர் களத்தில் இறந்துப்போனவர்களை ஒருபோதும் மறப்பதில்லை.
அந்த நியதி தமிழர் தாயகத்துக்கும் நிச்சயமாக பொருந்திக்கொள்ளும். இதுவே ஈழத்தமிழர்களுக்கு நவம்பர் 27 மாவீரர்நாள் என்ற அடையாளமாகியுள்ளது.
தமிழ்மக்களின் முற்றத்தில் இந்தப்புனித அடையாளம் உருவாகி இன்னும் அரைநூற்றாண்டுகாலம் கூட ஆகவில்லை. ஆனால் அது ஏற்படுத்திய பெரும் தாக்கம் புனிதத்துக்கும் உரிய நாளாக தமிழ்மக்களால் போற்றப்பட வைக்கின்றது.
1982 ஆம் ஆண்டின் இதேநாள் மாலை 6.05 க்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மாவீரரான லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் தனது தாயகத்துக்காக தன்னுயிரை அணைத்துக் கொண்ட நேரமே மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமாக பதிவாகிகொண்டது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கு மாவீரர்நாள் இன்று சுழற்சியடைந்துள்ளது.
உலகப்பரப்பில் தமிழ்மக்கள் வாழும் நாடுகளின் நேரவலையங்களுக்கு ஏற்ப இன்றைய நாளின் நினைவு கூரல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் முதலில் பசுபிக்பிராந்திய நாடான நியூசிலாந்தில் அதன் உள்ளுர் நேரப்படி இன்று மாலை முதலாவது நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வே உலகப்பரப்பில் மாவீரர் நாளை ஆரம்பித்துவைத்த நிகழ்வாகவும் பதிவாகியது.
முதலில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நாடு
நியூசிலாந்து தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஈகைக்சுடரேற்றும் நிகழ்வுகளுடனும் மாவீரர் பாடல் ஒலிப்புடன் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
மாவீரர்பாடல் இசைக்கப்பட்டபோது மக்களின் தீப அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரதான நிகழ்வுகள் வழமைபோல இன்று மாலை இடம்பெறவுள்ளன.
அதற்குரிய தயார்ப்படுத்தில் ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவு கூரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் இலங்கை இராணுவத்தின் 592 ஆவது படைப்பிரிவு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் துயிலும் இல்லத்துக்கு அருகாக உள்ள சிறிய பகுதியில் பாரிய இட நெருக்கடிக்கு மத்தியில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |