மாலத்தீவு அடுக்குமாடி தீவிபத்து! தமிழ் தம்பதி பரிதாப பலி... உருக்கமான தகவல்கள்
மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த தமிழக தம்பதி.
வெளியான உருக்கமான தகவல்கள்.
மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் அதில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் தரை தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயானது தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் பரவியது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடும் முயற்சி செய்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 10 பேர் பலியாகினர் இதில் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட காஞ்சிரகோடு, கொல்லன்விளாகம் சேர்ந்த கணவன்- மனைவியான எட்வின் ஜெனில் (44), சுந்தரி (40) உட்பட 3 தமிழர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அவர்களது உறவினர்கள், மற்றும் ஊரார்கள், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்தை தொடர்பு கொண்டு மாலத்தீவில் மரணம் அடைந்த கணவன் மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஜெனில் சகோதரர் ராபி கூறுகையில், எனது தம்பி எட்வின் ஜெனில் மாலத்தீவில் தங்கியிருந்து கொத்தனார் கான்ட்ராக்ட் பணிகளை மேற்கொண்டு வந்தார். உடன் அவர் மனைவியும் தங்கியிருந்தார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். குழந்தைகள் இல்லை.
தினசரி காலை எங்களை போனில் தொடர்பு கொண்டு ஜெனில் பேசுவார். நேற்று முன்தினம் இரவு முதல் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அங்குள்ள மற்றவர்களிடம் விசாரித்தோம். இதில் மாலத்தீவில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நடந்தது தொடர்பான தகவல் தெரியவந்தது என கூறியுள்ளார்.