நடுசாலையில் கணவருக்கு நெஞ்சுவலி - மனைவி உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் உதவாததால் பலி
நடுசாலையில் கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மனைவி உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் உதவாததால் அவரது கணவர் உயிரிழந்துள்ளார்.
நடுசாலையில் மாரடைப்பு
கர்நாடக மாநிலம், தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தவர் 34 வயதான வெங்கடரமணா.

இவருக்கு 2020 ஆம் ஆண்டில் ரூபா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 5 வயது மகனும், ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.
அதிகாலை 3.30 மணியளவில், வீட்டில் இருக்கும் போது வெங்கடரமணாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக தங்களது இரு சக்கர மோட்டார் வாகனத்தில், கத்ரிகுப்பே ஜனதா பஜார் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.
அந்த மருத்துவமனையில், ECG-யில் லேசான மாரடைப்பு இருப்பது தெரியவந்தது. இருப்பினும், அங்கு முதன்மை சிகிச்சை அளிக்கப்படவில்லை, ஜெயதேவா மருத்துவமனைக்குச் செல்லும்படி தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் எதுவும் வழங்கப்படாததால், தங்களது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் ஜெயதேவா மருத்துவமனையை அடைய முயன்றனர்.
கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்ற போது, வெங்கடரமணாவுக்கு மீண்டும் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதினார்.
கண்கள் தானம்
100 மீட்டர் தூரம் பயணித்த பிறகு, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரது மனைவி ரூபா, சாலையில் ஓடும் வாகனங்களை உதவிக்காக கையசைத்து நிறுத்த முயன்றனர். ஆனால் 30 நிமிடங்களுக்கும் மேலாக யாரும் அவருக்கு உதவ நிற்கவில்லை.
WATCH | No help from ambulance or passersby: 34-year-old Bengaluru man dies of heart attack on street. pic.twitter.com/GUQlt9c6S4
— The Tatva (@thetatvaindia) December 17, 2025
வெங்கடரமணாவின் சகோதரி சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உயிரைக் காப்பாற்ற சாலையின் நடுவில் CPR செய்தார். இறுதியாக ஒரு டாக்ஸி ஓட்டுநர் உதவ வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால், கால தாமதமாகியுள்ளதால் வெங்கடரமணா உயிரிழந்துவிட்டதாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரமான சூழலிலும் வெங்கடரமணாவின் கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |