“மகனிடம் மட்டும் சொல்லிடாதீங்க” விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சிய கூத்தாடிய மும்பை தொழிலதிபர்
விமான நிலையத்தில் மகனை போர்டிங் கேட் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்ட தொழிலதிபரை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிக்கி கொண்ட தொழிலதிபர்
பொதுவாகவே விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் புறப்பாடு முனையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் சிறப்பான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சிந்தன் காந்தி என்ற நபர், படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்லும் தனது மகனை போர்டிங் கேட் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக போலி அடையாள அட்டை ஒன்றை தயாரித்துள்ளார்.
போர்டிங் கேட்டை நோக்கி சென்ற சிந்தன் காந்தி, சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார், அப்போது தனது பெயரை ராம்குமார் என்றும், தான் மத்திய பாதுகாப்பு படையில் (CRPF) உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும் கூறி அடையாள அட்டை காண்பித்துள்ளார்.
இதையடுத்து அடையாள அட்டையை சோதனை செய்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மும்பை விபி சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் சிந்தன் காந்தி என்பதும், தனது மகனை வழி அனுப்புவதற்காக இந்த ஏமாற்று வேலையை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் இதற்காக இணையத்தில் இருந்து சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளின் அடையாள அட்டையை டவுன்லோட் செய்து அதில் தனது முகத்தை மார்பிங் செய்து லேமினேட் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“மகனிடம் சொல்லிடாதீங்க”
சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளிடம் கையும்களவுமாக சிக்கிக் கொண்டதை அடுத்து, தயவு செய்து இதனை என்னுடைய மகனுக்கு தெரியப்படுத்தி விட வேண்டாம் என்று சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளிடம் சிந்தன் காந்தி கெஞ்சியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தந்தை குறித்த தகவலை மகனுக்கு தெரிவிக்காமல், அவரை கைது செய்து சஹார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
twitter.com/cisfhqrs