சடலமாக மீட்கப்பட்ட இஸ்ரேல் பிணைக் கைதிகள்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக வெடித்த போராட்டம்
காஸாவில் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் 6 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
நெதன்யாகு அரசாங்கத்திற்கு அழுத்தம்
இஸ்ரேலின் தொழிலாளர் அமைப்பான Histadrut நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. திங்களன்று உள்ளூர் நேரப்படி பகல் 6 மணியில் இருந்து வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றே Histadrut அறிவித்துள்ளது.
இதனூடாக பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்கவும் Histadrut அமைப்பு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிணைக் கைதிகளை மீட்பதில் ஆர்வம் இல்லை என்றும்,
பாலஸ்தீன மக்களை கொன்று குவிப்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார் என்றும், பிணைக் கைதிகள் மொத்தமாக மீட்கப்பட்டால், போர் முடிவுக்கு வந்துவிடும் என்பது நெதன்யாகுவுக்கு தெரியும் என்றும் பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன், பிணைக் கைதிகளை மீட்கும் விவகாரம் தொடர்பில் இதுவரை பெஞ்சமின் நெதன்யாகு எந்த நடவடிக்கையும் முன்னெடுத்ததில்லை என்றும் இஸ்ரேல் மக்கள் நம்புகின்றனர்.
பாலஸ்தீன மக்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை மட்டும் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை முன்னெடுத்துள்ளார் என்றே மக்கள் கூறுகின்றனர்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
இந்த நிலையில் தற்போது 6 பிணைக் கைதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தை குறிப்பிட்டு மீண்டும் தாக்குதலை உக்கிரப்படுத்தும் நடவடிக்கையை பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது, இதன் பொருட்டே தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிணைக் கைதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரளான மக்கள் ஜெருசலேமில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஸாவில் இன்னமும் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், மக்களில் பலர் பிணைக்கைதிகளை மீட்க பெஞ்சமின் நெதன்யாகு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |