மொரிஷியஸ் பற்றி வியப்பூட்டும் தகவல்களும்.. அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையும்
மொரிஷியஸ் நாட்டை பற்றிய வரலாறும், சில முக்கிய தகவல்களை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மொரிஷியஸ் தீவு நாடு
ஆப்பிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு தான் மொரிஷியஸ் (Mauritius). இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் மொரிசியசு குடியரசு (Republic of Mauritius) ஆகும்.
இந்த நாட்டை ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் என்றும் அழைக்கின்றனர். மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன. இந்த நாட்டின் பெரிய நகரம் போர்ட் லூயிஸ் (Port Louis).
நெப்போலியப் போர்களின் போது நாட்டின் அதிகாரத்தை பிரித்தானியர் கைப்பற்றினர். இதையடுத்து 1968 -ம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். அதோடு, ஆப்பிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.
குறிப்பாக டோடோ பறவைகளின் அறியப்பட்ட இடம் என்றால் மொரிஷியஸ் தான். இந்த இனமானது, முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் அழிந்தது. இந்த நாட்டின் மக்கட்தொகை 2022-ம் ஆண்டு நிலவரப்படி 12.6 லட்சம் ஆகும்.
வரலாறு
நீண்ட காலமாக அறியப்படாமல் இருந்த இந்த மொரிஷியஸ் தீவு நாட்டில், முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அதன்பிறகு போர்த்துக்கேயர் கால் பதித்தனர்.
அவர்கள் இத்தீவை 'செர்ன்' எனக் குறிப்பிட்டனர். இதன்பின்னர் 1598 -ம் ஆண்டில் டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிஷியஸ் எனப்பட்டது.
இதையடுத்து, ரீயூனியனை கைப்பற்றிய பிரான்ஸ் 1715ல் மொரிசியசைக் கைப்பற்றியது. 1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிஷியஸ் 1968 -ல் சுதந்திரம் பெற்று 1992 -ம் ஆண்டு குடியரசானது.
மொழி மற்றும் பொருளாதாரம்
இங்கு இந்து மதம், கிறிஸ்தவம், முஸ்லீம் ஆகிய மதங்கள் உள்ளன. மொழிகளை பொருத்தவரை தமிழ், போர்ச்புரி, மொரிஷியஸ் கிரியோல் உள்ளிட்டவை பேசப்படுகின்றன.
இந்த நாட்டில் வெள்ளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. 80 சதவீதம் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் சர்க்கரை சார்ந்த பொருட்கள் யூரோப் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதாவது 60 லட்சம் டன் சர்க்கரை ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இங்கு மீன் பிடிக்கும் தொழில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கடல் சார்ந்த உணவுகளையும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதையடுத்து முக்கிய வருவாய் சுற்றுலா மூலம் பெறப்படுகிறது.
மொரிஷியஸ் தமிழர்கள்
மொரிஷியஸ் நாட்டில் ஏறக்குறைய 55000 தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
1810 -ம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்கள், மொரிஷியஸ் நாட்டில் வேலை செய்வதற்காக தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மக்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் திருப்பி அழைத்து வராததால் அவர்கள் அங்கேயே இருந்தனர்.
இந்த நாட்டில் தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் இருந்துள்ளனர். இங்கு, சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாக உள்ளது.
இந்த நாட்டின் தமிழ் கல்விக்கு தமிழ்நாடு அரசும் அண்மையில் உதவ முன்வந்தது. இங்கு சில இந்து கலாச்சாரமும் பின்பற்றப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகை, பொங்கல், துர்கா பூஜைகள் கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக, மொரிஷியஸ் நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த நாடு அருகில் உள்ள நாடுகளுடன் நட்புறவில் இருப்பதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி போர் கப்பல் ஒன்றை அர்ப்பணித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |