நீண்ட 30 ஆண்டுகள்... ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறும் முக்கிய நிறுவனம்
உக்ரைன் படையெடுப்பை அடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து மெக்டோனல்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
நீண்ட 30 ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்த மெக்டோனல்ஸ் நிறுவனம், அங்குள்ள தங்கள் உணவகங்களை விற்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி, உக்ரைன் மீதான படையெடுப்பால் ஏற்பட்டுள்ள தொழில்முறை சிக்கல் உள்ளிட்டவையே தங்களின் இந்த முடிவுக்கு காரணம் என துரித உணவக ஜாம்பவான் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 1990ல் மாஸ்கோ நகரில் முதன்முறையாக மெக்டோனல்ஸ் துரித உணவு நிறுவனம் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் ரஷ்யாவில் செயல்பட்டுவந்த தங்களின் 850 உணவகங்களை கடந்த மார்ச் மாதம் தாற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது மெக்டோனல்ஸ்.
மேலும், உள்ளூர் தொழில் முனைவோரிடம் தங்கள் உணவகங்களை விற்பனை செய்யும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மெக்டோனல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, தங்களின் இணைய பக்கங்களை முடக்கவும், அதன் ஊடாக தங்கள் பெயர், உணவுப்பட்டியல் போன்றவற்றை இனி எவரும் ரஷ்யாவில் பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், தங்களின் 850 உணவகங்களும் விற்பனை செய்யப்படும் வரையில், அங்கு பணியாற்றியுள்ள 62,000 ஊழியர்களுக்கும் ஊதியமளிக்கவும், வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறமிருக்க, ரெனால்ட் நிறுவனமும் ரஷ்யாவில் தங்கள் சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
பிரெஞ்சு நிறுவனமான ரெனால்டுக்கு சொந்தமான 68% பங்குகளை ரஷ்ய அறிவியல் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதனால் ரெனால்ட் நிறுவனத்தின் ரஷ்ய சொத்துக்கள் அனைத்தும் தற்போது அரசாங்கத்திற்கு சொந்தம் என தெரியவந்துள்ளது.