சரக்கு கப்பலை கடத்த முயன்ற புலம்பெயர் மக்கள்: இத்தாலியில் சம்பவம்
துருக்கியில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பலை புலம்பெயர் மக்கள் 15 பேர் குழு ஒன்று கடத்த முயன்ற சம்பவம் இத்தாலிய சிறப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கப்பலை கடத்த முயற்சி
கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி குறித்த சரக்கு கப்பலை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட புலம்பெயர் மக்கள் எந்த நாட்டவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
@getty
ஆனால் ஐரோப்பாவில் நுழையும் திட்டத்துடன், அந்த 15 பேர்கள் குழு குறித்த சரக்கு கப்பலை கைப்பற்ற முயன்றதாகவே கூறப்படுகிறது. துருக்கியில் இருந்து வாகனங்களை ஏற்றிக்கொண்டு 22 ஊழியர்களுடன் ஜூன் 7ம் திகதி பிரான்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளது.
ஆனால் இத்தாலி கடற்பகுதியில் வைத்து புலம்பெயர் குழுவினரை கப்பல் ஊழியர்கள் அடையாளம் கண்டுள்ளதாக கூறுகின்றனர். மட்டுமின்றி, சில கப்பல் ஊழியர்களை அவர்கள் சிறைபிடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கப்பல் மாலுமி துருக்கி அதிகாரிகளுக்கு உதவி கேட்டு தகவல் அளிக்க, அவர்கள் இத்தாலிய நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த வேளை கப்பல் இத்தாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது.
7 மணி நேரம் நீண்ட நடவடிக்கை
உடனடியாக இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவிட, சிறப்பு படையினர் அந்த சரக்கு கப்பலுக்குள் நுழைந்துள்ளனர். 7 மணி நேரம் நீண்ட நடவடிக்கைகளுக்கு இறுதியில் கப்பலின் கட்டுப்பாட்டினை மீட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
@AFP
தொடர்ந்து 15 பேர்கள் கொண்ட புலம்பெயர் குழுவினரையும் கைது செய்துள்ளனர். அந்த சரக்கு கப்பல் தற்போது நேபிள்ஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கைதான புலம்பெயர் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக பதில் கூற மறுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.