திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 9 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியான சோகம்
ஆப்கானிஸ்தானில் சிறிய பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில், பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாதையில் பயணித்த சிறிய பேருந்து
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சார்-இ-புல் மாகாணத்தில் பாதி சாலைகள் கொண்ட மலைப்பகுதியில் சிறிய பேருந்து ஒன்று சென்றுள்ளது.
திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய அந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
25 பேர் பலியான சோகம்
இதில் பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து குறித்து உள்ளூர் காவல்துறைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் தின் முகமது நசாரி கூறும்போது, பேருந்து சாரதியின் கவனக்குறைவால் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது என்றார்.
ஆனால் எத்தனை பேர் பிழைத்தார்கள் என்று அவர் கூறவில்லை. ஆப்கானிஸ்தானில் மோசமான சாலை நிலைமைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக போக்குவரத்து விபத்துகள் பொதுவாக நிகழ்வதாக கூறப்படுகிறது.
AP