தமிழக முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு! ED ரெய்டு பற்றி விவாதம்
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், அவர் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணை
கடந்த 2006 -2011 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.81.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது. ரூ.41.90 கோடி வைப்பு நிதியும் முடக்கப்பட்டது.
பின்பு, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறையினர் 2 நாள்கள் விசாரணை நடத்தினர்.
தமிழக முதல்வருடன் பொன்முடி சந்திப்பு
அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியை, திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சந்தித்தனர்.
அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, சி.வி.கணேசன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் சந்தித்து அமலாக்கத்துறை விசாரணை பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் இல்லத்தில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |