தவறு செய்துவிட்டார்கள்... ரஷ்ய தாக்குதல் குறித்து பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப்
34 பேர்களை பலிவாங்கிய ரஷ்ய தாக்குதல் தொடர்பில், அது பயங்கரமான விடயம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
பயங்கரமானது
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. சமீப நாட்களில் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் என ரஷ்யாவின் கை ஓங்கி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் சுமி நகரம் மீது ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலில் 34 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பின் கேட்கப்பட்ட கேள்விக்கு, குறித்த தாக்குதல் சம்பவமானது பயங்கரமானது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் தவறு செய்துவிட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு பயங்கரமான விடயம் என்று நான் நினைக்கிறேன். முழுப் போரும் ஒரு பயங்கரமான விடயம் என்று நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
மேலும், தவறு என குறிப்பிட்டதற்கு விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், அவர்கள் தவறு செய்துவிட்டார்கள், அவர்களிடமே கேளுங்கள் என்றும் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். ஆனால் யார் தவறு செய்தார்கள் என்பதை ட்ரம்ப் குறிப்பிட மறுத்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் NSC ஞாயிறன்று தெரிவிக்கையில், இந்த பயங்கரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சிகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்கான தெளிவான மற்றும் அப்பட்டமான நினைவூட்டலாக ரஷ்ய தாக்குதல் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
பார்க்க வாருங்கள்
ஆனால் தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று ட்ரம்பும் அல்லது வெள்ளை மாளிகையும் குறிப்பிடவில்லை. ட்ரம்பின் சிறப்பு தூதர் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யாவுக்கு சென்று ஜனாதிபதி புடினை சந்தித்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு உக்ரைனின் சுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் கொடூரத்தை நேரிடையாக வந்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜனாதிபதி ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எந்தவொரு முடிவுகளுக்கும், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன், பொதுமக்கள், வீரர்கள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், குழந்தைகள் என ரஷ்யாவால் அழிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டவர்களைப் பார்க்க வாருங்கள் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |