விளாடிமிர் புடினின் கைதை உறுதி செய்ய வேண்டும்: நாடொன்றின் அதிகாரிகளுக்கு அழுத்தம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த வாரம் மங்கோலியாவுக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில், அவரை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுவே முதல் முறை
ரஷ்ய ஜனாதிபதி புடின் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மங்கோலியாவுக்கு பயணப்பட உள்ளார். மார்ச் 2023ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்ட பிறகு, ரஷ்ய தலைவர் ஐசிசி உறுப்பு நாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து போர்க்குற்றங்களுக்கு புடின் பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
மட்டுமின்றி, போர் தொடங்கியதன் பின்னர் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்துவதை தடுக்க அவர் தவறிவிட்டார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மங்கோலியா விஜயத்தின் போது அவர் கைது செய்யப்பட வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் அழுத்தம் அளித்து வந்தாலும், தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றே ரஷ்ய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
கைது செய்யும் அதிகாரம்
மேலும் மங்கோலியாவுடன் தங்களுக்கு நெருக்கமான உறவு உள்ளது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதி புடின் முன்னெடுக்கும் பயணம் தொடர்பில் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில், ஐசிசி செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் கடமை மங்கோலியா உட்பட ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் உண்டு. இதனால் இந்த விவகாரத்தில் மங்கோலியா ஒத்துழைக்கும் என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சந்தேக நபர்களை கைது செய்யும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை. ஆனால் உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் அளிக்கலாம்.
இதனிடையே, உக்ரைனின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என்ற உண்மையை மங்கோலியா அறிந்திருக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |