டெல்டா மாறுபாட்டால் தத்தளிக்கும் பிரபல தலைநகரம்: ஒரே நாளில் உச்சம் தொட்ட துயரம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 144 பேர் கொரோனா நோயால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் மாஸ்கோவில் பதிவான மரண எண்ணிக்கையில் இதுவே உச்சம் என கூறப்படுகிறது.
மாஸ்கோவில் பரவும் கொரோனா தொற்றுக்கு காரணம் அதிக அளவில் பரவும் டெல்டா மாறுபாட்டை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் மந்தமான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாஸ்கோவில் 6,723 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவை பொறுத்தமட்டில் தற்போது தொற்றுநோயின் தேசிய மையப்பகுதியாக மாஸ்கோ மாறியுள்ளதாகவும் நாளுக்கு 2,000 மக்கள் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நகர மேயர் Sergei Sobyanin தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம் மிகுந்த டெல்டா மாறுபாடு காரணமாகவே மாஸ்கோவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. புதிதாக உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் 90% பேர்களில் டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள, மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அல்லது ஊரடங்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு நாம் மீண்டும் தள்ளப்படுவோம் என Sergei Sobyanin தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாஸ்கோவில் மரண எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம் யூரோ கிண்ணம் கால்பாந்து விளையாட்டு எனவும் கூறப்படுகிறது.
Saint Petersburg நகரில் யூரோ கிண்ணம் போட்டி ஒன்று முன்னெடுக்கப்பட்ட பின்னர் கொரோனா இறப்பு எண்ணிக்கை 107 என பதிவானதாக தகவல் வெளியானது.
பெல்ஜியம் மற்றும் பின்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை காண குவிந்த பின்லாந்து ரசிகர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த களேபரங்களுக்கு நடுவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை யூரோ கிண்ணம் காலிறுதி ஆட்டத்தை நடத்த மாஸ்கோ நகரம் தயாராக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.