800 பயணிகளுடன் பாதியில் நின்ற ரயில்: எச்சரிக்கை விடுத்தும் ரயிலை இயக்கியது ஏன் என எம்.பி கேள்வி?
வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் ரயிலை இயக்கியது ஏன் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட ரயில்
தென்தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 17 -ம் திகதி திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.
இதனால் ரயிலுக்குள் இருந்த 800 பயணிகள் சிக்கினர். அவர்கள், உணவு, தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்பு, அவர்களை 3 வது -நாளில் மீட்கும் பணி நடைபெற்று முடிவடைந்தது.
சு.வெங்கடேசன் பதிவு
இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் திகதியை வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?
அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?
தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன, தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா? நிதியமைச்சர் அவர்களே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |