Google Search -ல் தற்கொலை குறித்து தேடிய இளைஞர்: உடனே உயிரை காப்பாற்றிய பொலிஸ்
கூகுளில் தற்கொலை தொடர்பாக தேடிய மும்பையை சேர்ந்த இளைஞரை, 2 மணி நேரத்தில் பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
கூகுளில் தேடல்
மும்பையில் மலாடி என்னும் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களாக வேலை தேடி அலைந்திருக்கிறார். மேலும், சிறையில் இருக்கும் தனது தாயை ஜாமினில் வெளியில் எடுப்பதற்கான வழியையும் தேடி அலைந்துள்ளார்.
ஆனால், இதில் எதுவும் நடக்காத விரக்தியில் கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடியுள்ளார்.
உயிரை காப்பாற்றிய பொலிசார்
இதனையறிந்த இன்டர்போல் காவல்துறை அமைப்பினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, இளைஞர் இருக்கும் இடத்தை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக குற்றப்பிரிவு பொலிசார், அந்த இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த இளைஞர், "கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எனது தான் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் ஜாமினில் எடுப்பதற்கான போதிய பணம் என்னிடம் இல்லை. இதனால், ராஜஸ்தானில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தேன்.
இங்கு, மீரா ரோட்டில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால், 6 மாதத்தில் அந்த வேலையும் பறிபோனது. பின்பு, எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சல், நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தான் தற்கொலை குறித்து கூகுளில் தேடினேன்" என்றார்.
பின்பு, அந்த இளைஞருக்கு தேவையான உதவிகளை வழங்கிவிட்டு, அவரது உயிரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர். இளைஞரின் உயிரை காப்பாற்றிய பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |