மியான்மர் நிலநடுக்கம்: 2,886 ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! மீட்புப் பணிகளில் தொய்வு
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை 2,886 ஆக அதிகரிப்பு
மியான்மர் வரலாற்றில் பதிவான மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது.
மேலும் இதன் தொடர்ச்சியாக 6.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கமும் சில நிமிட இடைவெளிக்கு பிறகு ஏற்பட்டு பொதுமக்களை பீதியில் தள்ளியது.
இந்த நிலநடுக்கங்களானது, அண்டை நாடான தாய்லாந்து வரையிலும் உணரப்பட்டது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2,886 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 373 பேரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு பணிகள்
இந்த நிலநடுக்கம் மியான்மரின் ஆறு பிராந்தியங்களில் 2 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உணவு, தங்குமிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மனநலம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக 12 மில்லியன் டொலர் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்கள் கடந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இருப்பினும், தலைநகர் நேப்பிடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இடிபாடுகளில் இருந்து ஒருவர் புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது மீட்பு பணிகளுக்கு நம்பிக்கையூட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |