ஆழ்கடலின் மர்மம்: பசிபிக் பெருங்கடலில் விசித்திரமான கருப்பு முட்டைகள்! வியப்பில் விஞ்ஞானிகள்
பசிபிக் பெருங்கடலில் விசித்திரமான கருப்பு அமைப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆழ்கடலின் மர்மம்
நம் உலகம் தொடர்ந்து வியப்புக்குரிய விஷயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் நம்மை ஒவ்வொரு நாளும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
ஆனாலும், அறிவியலின் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இத்தகைய அதிசயங்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், ஜப்பானிய விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஜப்பானில் உள்ள டோக்கியோ மற்றும் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அண்மையில் பசிபிக் பெருங்கடலில் 6,200 மீட்டர் (சுமார் 20,341 அடி) ஆழத்தில் மர்மமான, கருப்பு நிற முட்டை போன்ற அமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி இந்த விசித்திரமான வடிவங்கள் கவனிக்கப்பட்டன.
கருப்பு முட்டைகளின் மர்மம்
கடலின் அடிப்பகுதியில், இந்த கருப்பு நிற அமைப்புகள் குவியலாகக் காணப்பட்டன. இவ்வளவு ஆழத்தில் இத்தனை பெரிய அளவில் இவை இருப்பது விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
ஆரம்பத்தில், இவை ஏதோ ஒரு அறியப்படாத கடல்வாழ் உயிரினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே, அவற்றை மேலும் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் குழு முடிவு செய்தது.
இந்தக் கண்டுபிடிப்பு நடந்த இடம், "அபிசோபெலஜிக் மண்டலம்" என்று அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.
இவ்வளவு ஆழத்திலிருந்து இந்த உடையக்கூடிய அமைப்புகளை மேற்பரப்பிற்கு கொண்டு வருவது பெரும் சவாலாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, மேலே கொண்டு வரும்போது பெரும்பாலான "முட்டைகள்" உடைந்துவிட்டன. வெறும் நான்கு மட்டுமே சேதமடையாமல் மீட்கப்பட்டன.
ஆச்சரியமான வெளிப்பாடு
மீட்கப்பட்ட நான்கு அமைப்புகளும் உடனடியாக முதுகெலும்பில்லாத உயிரினங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பப்பட்டன.
அவர்கள் ஆய்வு செய்தபோது, இது முட்டைகள் அல்ல, மாறாக தட்டைப்புழுக்களின் (Platyhelminthes) கூடுகள் என்பது தெரியவந்தது.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இதற்கு முன்பு இப்படிப்பட்ட தட்டைப்புழு கூடுகளைப் பார்த்ததில்லை என்று கூறினர்.
இந்தக் கூடுகள் வெட்டப்பட்டபோது, அதிலிருந்து பால் போன்ற வெள்ளை நிற திரவம் வெளிவந்தது. அதற்குள்ளே சிறிய, அடர்த்தியான வெள்ளை நிற உடல்கள் இருந்தன. இதுவே, அவை தட்டைப்புழு கூடுகள் என்பதை உறுதிப்படுத்தியது.
இந்தக் கண்டுபிடிப்பு, இத்தகைய முதுகெலும்பில்லாத உயிரினங்கள் கடலின் மிக ஆழமான பகுதிகளிலும் வாழ முடியும் என்பதற்கு முக்கியமான ஆதாரத்தை வழங்குகிறது.
முன்னெப்போதும் இல்லாத ஆழ்கடல் தட்டைப்புழு
இந்த கருப்பு, சற்றே பயங்கரமான தோற்றமுடைய அமைப்புகள் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கின்றன. இவ்வளவு ஆழத்தில் தட்டைப்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன் 5,200 மீட்டர் (சுமார் 17,060 அடி) ஆழத்தில் தட்டைப்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த புதிய கண்டுபிடிப்பு தட்டைப்புழுக்கள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்கள் கடலின் ஆழமான சூழலிலும் வாழ்கின்றன என்பதைத் திட்டவட்டமாக நிரூபிக்கிறது.
பயாலஜி லெட்டர்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் இணை எழுத்தாளர் இது குறித்துக் கூறும் போது, "இதுவரை நான் இப்படிப்பட்ட தட்டைப்புழுவை எங்கும் பார்த்ததில்லை. இது எனது ஆய்வுப் பயணத்தில் ஒரு புதிய, அரிய மற்றும் மறக்க முடியாத கண்டுபிடிப்பு" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |