பிரித்தானியாவில் மகள்... கடவுச்சீட்டு கோரி நீதிமன்றத்தை நாடிய நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி நளினி, தமது கணவருக்கு கடவுச்சீட்டு அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கணவர் முருகனை அனுமதிக்க
பிரித்தானியா சென்று அங்கு தனது மகளுடன் வாழ கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்கு கணவர் முருகனை அனுமதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 பேர்களும் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இலங்கையர் என்பதால் தமது கணவன் முருகனை திருச்சியில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லண்டனில் தமது மகள் வசிப்பதால், அவருடன் தங்கிக்கொள்ள தாம் விரும்புவதாகவும், தாமும் கணவரும் அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான திட்டத்தில் இருப்பதாகவும் அதற்கென கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதன்பொருட்டு ஜனவரி 30, 2024 அன்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான ஒரு நிலை ஏற்படும்
இதில் தமது நேர்காணம் முடிவடைந்தது என்றும், ஆனால் தமது கணவன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கியுள்ளதால், இலங்கை துணைத் தூதரகத்தால் அழைக்கப்பட்டபோது நேர்காணலுக்குச் செல்ல முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே திருச்சி முகாமில் தங்கியுள்ள இருவர் மரணமடைந்துள்ளதால், தமது கணவருக்கும் அப்படியான ஒரு நிலை ஏற்படும் முன்னர் லண்டனில் தங்களது மகளுடன் சென்று வசிக்க திட்டமிட்டுள்ளதாக நளினி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தனது கணவரை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு நேர்காணலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக நளினி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |