மூர்க்கமான தாக்குதல்.. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 34 ஆண்டுகளுக்கு பின் சிறை தண்டனை!
34 ஆண்டுகளுக்கு முந்தைய சாலை விபத்து வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில அமைச்சராகவும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பதவி வகித்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இந்திய கிரிக்கெட் அணியில் துடுப்பாட்ட வீரராக விளையாடிய சித்துவின் கார், கடந்த 1988ஆம் ஆண்டு பாட்டியாலாவில் விபத்தில் சிக்கியது.
அப்போது தனது வாகனம் மீது மோதியவர்களுடன் சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் முதியவர் ஒருவரை தாக்கினார். குர்னம்சிங் என்ற அந்த முதியவர் மூர்க்கமாக தாக்கப்பட்டதால், தாக்குதலுக்கு உள்ளான சில நாட்களிலேயே உயிரிழந்துவிட்டார்.
இதனால் சித்துவின் மீது வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம் முதலில் சித்துவை விடுதலை செய்தது. ஆனால், கடந்த 2007ஆம் ஆண்டு பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தபோது, அதனை எதிர்த்து சித்து மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில் அவரது மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உச்ச நீதிமன்றம் தற்போது அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.