நேபாளப் பெருவெள்ளம்: பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள்
Nepal floods leave women and girls vulnerable: நேபாளப் பெருவெள்ளம் காரணமாக கூடாரங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
நேபாளப் பெருவெள்ளத்தில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள், கூடாரங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பிரச்சினைகள்
சமீபத்தில், மொரக்கோ நாட்டிலிருந்து, சியூட்டா நகரத்துக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைந்த விடயம் நினைவிருக்கலாம்.

தங்க இடமில்லாமல், அந்த மக்கள் தெருவோரமாக படுத்துத் தூங்க, கழிவறைக்குச் செல்லும் பெண்களும் சிறுமிகளும்கூட வன்புணரப்பட்ட சம்பங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கின.
சமீபத்தில், புலம்பெயர்வோர் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அந்தப் படகில் வைத்தே இளம்பெண்ணொருவர் மூன்று பேரால் வன்புணரப்பட்டார்.
இந்நிலையில், நேபாளப் பெருவெள்ளம் காரணமாக வீடுகளையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்தவர்கள், கூடாரங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆக, தங்கள் நாட்டிலானாலும் சரி, ஒரு நல்ல வாழ்வுக்காக இன்னொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்தாலும் சரி, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எங்குமே பாதுகாப்பில்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகியுள்ளது.
நேபாளத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உருவாகிவரும் பிரச்சினைகள்
நேபாளப் பெருவெள்ளத்தில் வீட்டை இழந்த கரிஷ்மா (Karishma Tamang, 26) கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

முதலில் தற்காலிக முகாம் ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்களுடன் தங்கவைக்கப்பட்டிருந்த கரிஷ்மா, தற்போது கூடாரம் ஒன்றில் தங்கியுள்ளார்.
ஒருபக்கம் மழை நேரங்களில் கூடாரம் ஒழுகுவது பிரச்சினையாக இருக்க, இன்னொரு பக்கம் அங்கு சரியான கழிவறை எதுவும் இல்லாததால், கர்ப்பமாக இருக்கும் கரிஷ்மா அவதியுற்றுவருகிறார்.
இதற்கிடையில், தற்காலிக முகாம்களிலும், கரிஷ்மாவைப்போல கூடாரங்களிலும் தங்கியிருக்கும் பெண்கள் சிலர், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் துஷ்பிரயோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு முன் பாதுகாப்பாக வீடுகளில் வாழ்ந்த பெண்கள், இப்போது அந்நியர்கள் கண் முன், பொது இடங்களில் குளிக்கும் நிலை வந்துள்ளதால் தர்மசங்கடமாக உணர்வதாக தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், பிள்ளைகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சரியான பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, அவர்களுக்கு, ஆட்கடத்தல், வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற அபாயங்கள் உள்ளதாக எச்சரித்துள்ளது.
அரசோ, தாங்கள் இந்த அபாயங்கள் குறித்து அறிந்துள்ளதாகவும், பிள்ளைகள் முதலானோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிசாரின் உதவியுடன் தக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.