கைதாணை மத்தியில்... ஐரோப்பிய நாடொன்றிகு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐ.சி.சி.யின் கைதாணை
எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்கிறார். தனது பயணத்தின் போது, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் பிற மூத்த ஹங்கேரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதன் பின்னர் ஏப்ரல் 6ம் திகதி நெதன்யாகு இஸ்ரேலுக்குத் திரும்புவார் என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐ.சி.சி.யின் கைதாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஓர்பன் நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நவம்பரில் ஐ.சி.சி முடிவுக்கு ஒரு நாள் கழித்து, அழைப்பு விடுத்து, இந்த விவகாரத்தில் தார்மீக தெளிவு காட்டியதற்காக நெதன்யாகு ஓர்பனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, ஐ.சி.சி முடிவு ஒரு வெட்கக்கேடான நடவடிக்கை என்றே நெதன்யாகுவுக்கு எழுதிய கடிதத்தில் ஓர்பன் குறிப்பிட்டிருந்தார்.
இணங்க வேண்டிய கட்டாயம்
காஸாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகியோருக்கு ஐ.சி.சி கைதாணைகளை பிறப்பித்தது.
1999ல் ஐ.சி.சி ஒப்பந்தத்தில் இணைந்துகொண்ட ஹங்கேரி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஓர்பனின் முதல் ஆட்சியின் போது அந்த ஒப்பந்தத்தை உறுதியும் செய்தது.
ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் காரணங்களுக்காக ஹங்கேரி தொடர்புடைய ஒப்பந்தத்தை அறிவிக்கவில்லை. எனவே ஐ.சி.சி முடிவுகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று ஹங்கேரி வலியுறுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |