பலமுறை எச்சரித்தேன்... அவுஸ்திரேலிய அரசாங்கத்தைப் பழித்த நெதன்யாகு
பாலஸ்தீன அரசுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அளித்த ஆதரவு யூத எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்று பல முறை எச்சரித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கொடூரமான படுகொலை
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.40 மணியளவில் ஹனுக்கா பண்டிகையின் போது இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கொடூரமான படுகொலை என்று இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு தாம் எழுதிய கடிதம் ஒன்றில், அல்பானீஸ் அரசாங்கத்தின் கொள்கைகள் யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவு, நாட்டில் யூத எதிர்ப்புக்கு வழி வகுக்கும் என்றும், அது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வெகுமதி அளிக்கிற நடவடிக்கை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
யூத எதிர்ப்பு
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று ஆகஸ்ட் 11 அன்று பிரதமர் அல்பானீஸ் கூறியிருந்தார்.
பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்ட நிலையிலேயே அவுஸ்திரேலியாவும் இஸ்ரேலின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அறிவிப்பை வெளியிட்டது.

தற்போது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு பரவுவதைத் தடுக்க அல்பானீஸ் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
நீங்கள் நோயைப் பரவ அனுமதித்தீர்கள், அதன் விளைவுதான் இன்று நாம் கண்ட யூதர்கள் மீதான கொடூரமான தாக்குதல் என நெதன்யாகு சாடியுள்ளார்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு ஒப்புக்கொண்ட அல்பானீஸ், தாக்குதலைக் கண்டித்தார், கட்டவிழ்த்து விடப்பட்ட தீமை புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |