ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய 5 ஆண்டுகள் வரையில் செல்லுபடியாகும் விசா: விரிவான தகவல்
பல முறை ஐக்கிய அரபு அமீரகம் சென்று திரும்பும் வகையில் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் புதிய விசாவானது உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2021ல் இருந்தே அமுலில் உள்ளது
குறித்த விசாவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பாட்டில் இருந்து வருவதாகவும் துபாய் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். பல முறை ஐக்கிய அமீரகம் சென்று திரும்பும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விசாவானது 2021ல் இருந்தே அமுலில் உள்ளது.
ஆனால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பல இந்த விசாவானது இந்தியர்களுக்கு என மட்டுமே அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது முற்றிலும் தவறான செய்தி என்றும் துபாய் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய விசாவானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யப்பட்ட 2 அல்லது 5 வேலை நாட்களில் விசாவானது வழங்கப்படுகிறது.
இந்த விசா ஊடாக பயணி ஒருவர் 90 நாட்கள் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க முடியும். அதன் பின்னர் மீண்டும் 90 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஓராண்டில் மொத்தமாக 180 நாட்களுக்கு மிகாமல் ஒரு பயணி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக தங்க முடியும்.
வைப்புத் தொகையாக 3,025 திர்ஹாம்
மொத்தம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த விசாவானது சமீப ஆண்டுகளில் பெரும் ஆதரவை ஈட்டி வருவதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் இருந்தே அதிகமானோர் இந்த விசா தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாவுக்கான கட்டணம் மருத்துவ காப்பீட்டு உட்பட 2,000 திர்ஹாமில் இருந்து தொடங்குவதாக கூறுகின்றனர். அத்துடன் விண்ணப்பதாரரின் வங்கியில் 4,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு ஒப்பான அந்தந்த நாட்டவரின் பணம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மேலும், வைப்புத் தொகையாக 3,025 திர்ஹாம் செலுத்த வேண்டும், இது திரும்பப் பெறப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |